Wednesday, June 01, 2011

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346

இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.

அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.

முதலில் பரிமேலழகர்

உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.

மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.

அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,

உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரைவேறுபாடு

வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.

எவ்வாறெனின்,

“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.

மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.

சமண அண்டவியல்

சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை

“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை

“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.

மூன்று உலகம்

சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.

மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)

மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)

கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)

இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.

மேல் உலகம் – ஊர்த்வ லோகம்

மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.

இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.

“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”

என்று மேருமந்தர புராணம் பகரும்.

உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை

உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.

“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)

என்றும்,

”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)

என்றும்,

”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)

முடிபு

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

இரா.பானுகுமார்,
சென்னை

பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!

http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)

No comments: